ஈரானில் ஹிஜாப் தொடர்பான சர்ச்சை, வெடித்த ஆர்பாட்டம் மற்றும் கலவரம் – 30 பேர் கொல்லப்பட்டனர்

அரபு நாடுகள் உலகம் செய்திகள்

‘சர்வாதிகாரிக்கு மரணம்’ கோஷத்துடன் ஹிஜாப்பை கழற்றி எறிந்து பெண்கள் போராட்டம்.
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான உடையான ஹிஜாப் அணிவது 1979-ம் ஆண்டு முதல் ஈரானில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது.
இதனிடையே, அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் கடந்த செவ்வாய்கிழமை (13-ம் தேதி) தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.
அதேவேளை, ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை போலீஸ் பிரிவு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தெஹ்ரான் செல்லும் வழியில் மாஷா அமினி மற்றும் அவர்களது குடும்பத்தினரை நெறிமுறை போலீசார் இடைமறித்துள்ளனர். அப்போது, மாஷா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி அவரை நெறிமுறை போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
மாஷா அமினி தனது தலைபகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை கடுமையாக தாக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். பின்னர், மாஷாவை தடுப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்தும் மாஷாவை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.
போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த மாஷா போலீஸ் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா அமினியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்தனர்.
கோமா நிலைக்கு சென்ற மாஷா அமினிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹிஜாப் சரியாக அணியாததால் போலீசார் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்த சம்பவம் பெரும் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மாஷா மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்ததாக ஈரான் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
மாஷாவின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் நேற்று திரண்ட நூற்றுக்கணக்கான பெண்கள் தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை கழற்றி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசிக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ‘சர்வாதிகாரிக்கு மரணம்’ எனக் கோஷமிட்டனர். அவர்களை போலீசார் அடித்து விரட்டினர். இதுவரை ஏற்பட்ட கலவரத்தில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *