உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது. இந்தியா 2 வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து ஆடிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 173 ரன்கள் பின்தங்கியதுடன் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
நேற்றைய, 4-வது நாள் ஆட்டத்தில், 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 270 ரன்களில் டிக்ளேர் கொடுத்து இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து இருந்தது. விராட் கோலி 44 ரன்கள், ரஹானே 20 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக களத்தில் இருந்தனர்.
இன்று ஐந்தாம் நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. கடைசி நாள் ஆட்டத்தின் முதல் பகுதியின் 46 வது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலண்ட் 2 விக்கெட்களை வீழ்த்தினார். 46 வது ஓவரின் 3 வது பந்தில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனைத் தொடர்ந்து 4 வது பந்தில் ஜடேஜா, அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முதல் இன்னிங்ஸில் 51 பந்துகளில், 48 ரன்கள் அடித்த ஜடேஜா, இரண்டாவது இன்னிங்ஸில் தான் பிடித்து 2வது பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து, வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
இதன்பிறகு, ரஹானே மற்றும் கே.எஸ்.பரத் இணை, இந்தியாவை சரிவில் இருந்து மீட்க போராடியது. நிதானமாக விளையாடி வந்த அஜின்க்யா ரஹானே, மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதன் காரணமாக இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 209 வித்தியாசத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இந்தியா 2 வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.
