தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கான கட்டணம் ஏப்ரல் மாதத்திலும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கான கட்டணம் செப்டம்பர் மாதத்திலும் உயர்த்தப்பட உள்ளது .இந்த சூழலில், ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு ஆகிய 3 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணங்கள் ரூ.5 முதல் ரூ.25 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. இங்கு கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.75 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கான கட்டணம் ரூ.110 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வர்த்தக வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.120 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கான கட்டணம் ரூ.180 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. பஸ்கள் மற்றும் டிரக்குகளுக்கு ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.255 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கான கட்டணம் ரூ.380 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வானகரம் சுங்கச்சாவடியில் கட்டணங்கள் ரூ.5 முதல் ரூ.15 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. இங்கு கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.55 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கான கட்டணம் ரூ.80 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.75 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கான கட்டணம் ரூ.115 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ள உள்ளூர் வணிகம் சாராத வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் ரூ.350 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

