தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் பாஜக தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தலைவர் பதவி போட்டியில் சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தென்காசி ஆனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் போட்டியில் இருந்தனர். இருந்த போதிலும் நயினார் நாகேந்திரன், தென்காசி ஆனந்தன் இடையே தான் கடும் போட்டி நிலவி வந்தது. கடைசி நேரத்தில் நயினார் நாகேந்திரனை தலைவர் பதவியில் நியமிக்க டெல்லி மேலிடம் முடிவு செய்தது.இந்த நிலையில் நயினார் நாகேந்திரன், மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட நேற்று தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் கமலாலயத்தின் நுழைவு வாயிலை தொட்டு வணங்கி உள்ளே சென்றார். அப்போது மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.விருப்ப மனுவை, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் பெற்றுக் கொண்டார். நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனுத்தாக்கல் செய்தார். அப்போது, திடீரென பாஜக நிர்வாகி ஒருவர் விருப்ப மனுவை வழங்க வந்தார். இதைப்பார்த்த எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், கட்சி நிர்வாகிகள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்நிலையில் மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு அளித்திருந்ததால் அவர் தமிழக பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதுதொடர்பாக அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழக பாஜக தலைவர் பதவிக்கான விருப்பமனு நயினார் நாகேந்திரனிடம் இருந்து மட்டுமே பெறப்பட்டுள்ளது. அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளை பல செய்துள்ளார். பிரதமர் மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதிலும் சரி, மத்திய அரசின் திட்டங்களை கிராமம் கிராமமாக கொண்டு செல்வதிலும் சரி, அண்ணாமலையின் பங்கு அளப்பரியது. அண்ணாமலையின் திறன்களை கட்சியின் தேசிய கட்டமைப்பில் பாஜக பயன்படுத்தும்’ என குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில், நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராகவும், அண்ணாமலை தேசிய பொறுப்புக்கும் மாற்றப்படுவது உறுதியானது. இந்நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று மாலை வானகரம் தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். தமிழிசை சௌந்திரராஜன், அண்ணாமலை, கரு.நாகராஜன், சசிகலா புஸ்பா, சரத்குமார், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழக பா.ஜனதாவில், நாடார் சமுதாயத்தை சேர்ந்த 2 பேர், கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த 2 பேர் மற்றும் ஆதிராவிடர், அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த தலா ஒருவர் மாநில தலைவராக பதவி வகித்துள்ளார்கள். முதன்முறையாக, மறவர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை மாநில தலைவராக பாஜக தேசிய தலைமை நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *