ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில், விழாக் காலங்களில் சென்னைப் போன்ற பெருநகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு மக்கள் படையெடுப்பதால் இந்த வாய்ப்பை பபயன்படுத்திக்கொண்டு தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. சாதாரண நாட்களில் குறைந்தபட்சம் 500 ரூபாய் விலையுள்ள டிக்கட் விழாக் காலங்களில் 4 மடங்கு அளவிற்கு உயர்ந்து 2000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது.
பண்டிகைக் காலங்களில் போக்குவரத்து துறை கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கினாலும் மக்கள் கூட்டம் அதைவிட பல மடங்கு இருப்பதால் ரயில் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்வது கட்டாயமாகிவிடுகின்றது. ரயில் டிக்கெட்டுகளும் தரகர்கள், ஏஜன்டுகள் என முந்திக்கொள்வதால் சரியாக முன்பதிவில் வாய்ப்பு கிடைக்காமல் கடைசி நேரத்தில் ஆம்னி பேருந்தில் கூடுதல் விலை கொடுத்து செல்லவேண்டிய அவல நிலையுள்ளது.
இந்த ஆண்டும் தற்போது நவராத்திரி, தீபாவளியென அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் மக்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்யத் தொடங்கி விட்டனர். இதனால் கட்டணக் கொள்ளையும் தொடங்கிவிட்டது. இதனால் தமிழக போக்குவரத்து துறை தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை அனுப்பியது. இதனை மறுத்த தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கட்டணப் பட்டியலை வெளியிட்டது.
சென்னையில் இருந்து சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் போன்ற ஊர்களுக்கு குறைந்தபட்சம் 500 முதல் அதிகம் 2000 வரை கட்டணம் நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதனை www.AOBOA.co.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். அதேபோல் டிக்கெட் கட்டணம் நிர்ணயக்க தமிழக அரசு தலையிடமுடியாது என்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.