நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாட்டிற்கு தற்போது மதச்சார்பற்ற சிவில் சட்டம் தேவை என்றும், அப்போதுதான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். பின்னர் ராணுவம், கடற்படை, விமானப் படையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் டெல்லி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாட்டிற்கு தற்போது மதச்சார்பற்ற குற்றவியல் சட்டம் தேவை என்றும், அப்போதுதான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் எனவும் தெரிவித்தார். 2036 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க வேண்டும் என்றும், அதற்கு தயாராகி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை அந்நாட்டு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.