சீனாவின் முக்கிய நகரமான ஷாங்காயில் இந்தியா புதிய தூதரக கட்டிடத்தை திறந்து வைத்துள்ளது. 2020ஆம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா–சீனா ராணுவத்தினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன வீரர்களும் பலர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு, இரண்டு நாடுகளுக்குமிடையே பதட்டம் நீண்ட காலம் நீடித்தது.இப்போது அந்த நிலைமை மெதுவாக சீராகி வருவதால், இந்தியா–சீனா உறவு மீண்டும் வலுப்பெறும் பாதையில் செல்கிறது. இதன் ஒரு பகுதியாகவே ஷாங்காயில் புதிய தூதரக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தூதரகம் ஷாங்காய் நகரின் சாங்னிங் மாவட்டத்தில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ளது. இது 1,436.63 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு, அதிநவீன வசதிகள், சுற்றுச்சூழல் நட்பு வடிவமைப்பு, ஆற்றல் சேமிப்பு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.இந்த புதிய தூதரகத்தை சீனாவில் இந்திய தூதராக உள்ள பிரதீப் குமார் ராவுத் திறந்து வைத்தார். இன்று முதல் இந்த புதிய அலுவலகத்தில் அனைத்து தூதரக பணிகளும் முழுமையாக தொடங்குகின்றன.

