ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் 2வது பிரிவு லீக் ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீசுடன் நேற்று மோதிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்தியா 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்து வெற்றிப் பெற்றது. தீப்தி ஷர்மா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியா 2 புள்ளிகள் பெற்றது. இந்திய அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் நாளை மறுநாள் இங்கிலாந்துடன் மோதுகிறது.
இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று மொத்தம் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிக்கான உலக கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டில் ஆண்கள் அணியே இத்தனை ஆண்டுளாக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் மகளிர் அணி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர்.