8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ல் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடந்தது இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார்.
இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.இந்திய அணி 8.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்தது .இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.
இந்த நிலையில் 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அவர்களின் திறமையால் நம் அனைவரையும் பெருமைப்படுத்துகிறது! மகளிர் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் சிறந்த திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியுள்ளனர்.வீராங்கனைகளின் வரவிருக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்
