தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், பேருந்தை இயக்கும் நேரத்தில் ஓட்டுநர்கள் சட்டைப்பையில் மொபைல் வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், பல ஓட்டுநர்கள் தொடர்ந்து மொபைல் போன்களை சட்டைப்பையில் வைத்திருப்பதுடன், பணியின் போதும் பயன்படுத்தி வருவதாக பயணிகளிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு பல இடங்களில் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து, பணிநேரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மொபைல் போனை வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் முழுமையாக தடை செய்யப்படுவதாக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும், பேருந்து நிலையங்கள் மற்றும் வழித்தட ஆய்வுகளின் போது ஓட்டுநர்கள் மொபைல் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவர்கள்மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

