ஓமன் நாட்டில் தமிழ்நாட்டு பாரம்பரிய உணவும், அதனோடு இலக்கியப் பணியும்

கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழ்க்கல்வி

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். தாய்லாந்து, மியான்பர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் ஏமாற்றப்பட்டு, தவிக்கும் செய்திகள் கடந்த சில நாட்களாக, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆறுதலும் ஆர்வமும் தரும் செய்தியாக வெளிநாடு ஒன்றில் தமிழர்கள் இணைந்து பாரம்பரியத்தை மீட்டு, இலக்கிய அறிவு, புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த முயற்சி எடுத்துள்ளனர்.
ஆம், ஓமன் நாட்டில் கால்லா(Galla) பகுதியில் தமிழர்கள் இணைந்து நளபாகம் என்கிற பாரம்பரிய உணவகத்தை நடத்தி வருகின்றனர். இங்கு, பழைய சோறு, கம்பு, கேழ்வரகு கூழ் உள்ளிட்ட உணவுகள் மற்றும் தமிழர் உணவுகள் பரிமாறப்படுகின்றன. இந்நிலையில், அறுசுவையோடு அறிவுச்சுவையும் சேர்ந்து வழங்கும் வகையில் ஓமன் தமிழ் குழுமத்தோடு இணைந்து புத்தக பகிர்வு பயணத்தை (இலவச நூலகம்) தொடங்கியுள்ளனர்.
இதன்படி, இங்குள்ள இலவச நூலகத்தில் இருந்து, வைரமுத்துவின் தமிழாற்றுப்படை, சு.வெங்கடேசனின் வேள்பாரி, தொ.பரமசிவனின் பண்பாட்டு அசைவுகள், பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை, நா முத்துகுமார் கவிதைகள், சினிமா வெற்றியின் 40 ஆண்டுகள் ஷாஜி, செல்லாத பணம் -இமயம், ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் -ஜான் பெர்கின்ஸ், அஞ்சலை -கண்மணி குணசேகரன் (Classic novel series),நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன் (Classic novel series), தீ கொன்றை மலரும் பருவம் – அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் (மொழிபெயர்ப்பு சர்வதேச இலக்கியம்), குற்றப்பரம்பரை – நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்து படித்த தாஸ்தாவேஜுகள் பாவெல் சக்தி, வெக்கை – பூமணி, எசப்பாட்டு – சா.தமிழ்ச்செல்வன், மானுடம் வெல்லும் -பிரபஞ்சன், அசுரன் -ஆனந்த் நீலகண்டன், சேப்பியன்ஸ்- யுவான் நோவா ஹாரி, மாபெரும் தமிழ் கனவு -பேரறிஞர் அண்ணா என 200க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இது மட்டுமின்றி தமிழ் ஆர்வலர்கள் வழங்கும் புத்தகங்களையும் சேகரித்து வைத்துள்ளனர்.
இவற்றை அங்குள்ள தமிழர்கள் இலவசமாக பெற்றுச் சென்று, வாசித்து விட்டு, திரும்ப வழங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி அண்மையில் (08.10.2022) நடைபெற்றது. விழாவில், ஓமன் தமிழ் குழுமத்தின் ஜெசீம், கவிஞர்கள் மன்னை.அசோக்குமார் ,குடந்தை அனிதா மற்றும் கபாலி சுப்ரமணியம்,பிரபசர் டேவிட் ராஜேஷ், நளபாகம் விஜய் பிள்ளை & மன்னை.கார்த்திக் & பிரபாகரன், மற்றும் சிவராஜ், தினேஷ், மோகன், அய்யப்பன், பாரதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.