டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவிற்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா வழங்கி கவுரவிக்கப்பட்டது

ஆஸ்திரேலியா இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சிறப்பு செய்திகள் நிகழ்வுகள் முதன்மை செய்தி

இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்பட்டுள்ளது.
தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா பல்வேறு தொழில் சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவர். குறிப்பாக, நாம் சுவையாக சாப்பிட உணவில் போடும் உப்பில் தொடங்கி, டீ, கைக்கடிகாரம், நம் வீட்டுச் சுவற்றில் உள்ள இரும்பு, டிடிஹெச், நகை, டாடா பவர், டாடா டெலிகம்யூனிகேஷன்ஸ், தாஜ் ஹோட்டல்ஸ் என ஒவ்வொன்றிலும் ரத்தன் டாடாவின் பங்கு என்பது நிச்சயம் இருக்கும். இவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் பிரபலமானவராக இருப்பதோடு, உலகம் முழுவதுமே டாடா குழுமத்தின் தொழில் நிறுவனங்கள் பறந்து விரிந்து இருக்கிறது.
அதன் அடிப்படையில் இந்தியா – ஆஸ்திரேலியா உறவுக்காக அவரது நெடுநாள் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ரத்தன் டாடாவுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா என்கிற விருதை ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ’ ஃபாரெல் ரத்தன் டாடா அவர்களை நேரில் சந்தித்து ஆஸ்திரேலிய அரசின் சார்பாக வழங்கியுள்ளார். இந்த விருது வழங்கும் போது டாடா சன்ஸ் தலைவரான என்.சந்திரசேகரன் அவர்களும் உடன் இருந்தார்.
இதுகுறித்து இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ’ ஃபாரெல் தனது ட்விட்டர் பக்கத்தில், விருது வழங்கப்பட்ட போட்டோவை பகிர்ந்து கூறுகையில் ” ரத்தன் டாடா அவர்களை வணிகம், தொழில் மற்றும் நன்கொடையில் தலைசிறந்தவர் என்று கூறி பாராட்டியுள்ளார். மேலும் ரத்தன் டாடா-வின் பங்களிப்பு ஆஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஆஸ்திரேலியா – இந்திய நட்புறவில் நீண்ட காலமாக அவர் பங்காற்றியுள்ளார் எனவும்” அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ”அவரது நெடுநாள் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருதை வழங்குவதில் மகிழ்ச்சி” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *