தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் உள்ள பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலில் நடைபெற்ற திருப்பணியின் போது, சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது. மாமன்னர் ராஜேந்திரச் சோழன் தனது சிற்றன்னை பஞ்சவன்மாதேவியின் நினைவாக பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை கோயிலை கட்டியுள்ளார். அக்கோயிலில் தற்போது குடமுழுக்கு திருப்பணி நடைபெற்று வருகிறது. கோயிலின் கருவறை சுவரின் அருகே, அகழி அமைக்கும் பணிக்காக சுவர் உடைக்கப்பட்ட போது, பள்ளம் இருப்பது போல தெரிய வந்தது. இதனை கண்ட பணியாளர்கள், உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மண்டல இணை ஆணையர் சிவகுமார், உதவி ஆணையர் ஹம்சன், மயிலாடுதுறை மண்டல செயற்பொறியாளர் வீரமணி, கும்பகோணம் கோட்ட உதவி பொறியாளர் வேலுசாமி, அரசு கலைக் கல்லூரி தொல்லியல் துறை பேராசிரியர் ரமேஷ், செயல் அலுவலர் நிர்மலா தேவி மற்றும் சரக ஆய்வாளர் சுதா ராமமூர்த்தி ஆகியோர் வருகை தந்தனர். தொல்லியல் பேராசிரியர் அதனை ஆராய்ந்ததில் பாதாள அறை எனக் கண்டறியப்பட்டது. இந்த பா அறையானது, 8 அடி ஆழம் மற்றும் 15 அடி நீளம் கொண்டது. விரைவில், இந்த பாதாள அறையை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என கூறப்படுகிறது.
