ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை இழந்தது. கடைசி பந்து வரை விறுவிறுப்பாக அமைந்த இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட், சுனில் நரேன் களத்தில் இறங்கினர். சால்ட் 14 பந்துகளில் 3 சிக்சர் 7 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நரேன் 10 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த ரகுவன்ஷி 3 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 1 சிக்சர் 7 பவுண்டரியுடன் 50 ரன்கள் சேர்த்தார்.
ரின்கு சிங் 24 ரன்களும், ரசல் 27 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 222 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர்.
விராட் கோலி 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். டூப்ளசிஸ் 7 ரன்னில் வெளியேற, வில் ஜேக்ஸ் – ரஜத் பட்டிதார் இணை கொல்கத்தா பவுலிங்கை அடித்து நொறுக்கி ரன்களை சேர்த்தது. இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஜேக்ஸ் 55 ரன்களும், பட்டிதார் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, பிரபுதேசாய் 24 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 19 ஆவது ஓவரில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது பெங்களூரு அணியின் நம்பிக்கை தகர்ந்தது.
கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றி பெற 21 ரன்கள் தேவைப்பட்டது. இதனை ஸ்டார்க் வீச முதல் மற்றும் 3, 4 ஆவது பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார் கர்ண் சர்மா. கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது, கரண் சர்மா, ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, கடைசி பந்தில் வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட்டது.
2 ரன்கள் எடுக்கப்பட்டால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு செல்லும் என்பதால் விறுவிறுப்பு உச்சத்திற்கு சென்றது. கடைசி பந்தை ஃபுல் அவுட்சைட் பந்தாக ஸ்டார்க் வீச, அதில் பெர்கூசனால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. 2 ஆவது ரன்னுக்கு அவர் முயற்சித்தபோது ரன் அவுட் ஆனார். இதன் மூலம் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
