5300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பின் தொன்மை தமிழ்நாட்டில் இருந்துள்ளது; இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் பேச்சு

அகழ்வாராய்ச்சி இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள். மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொல்லியல் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ நூலை வெளியிட்டார்.
தொடர்ந்து விழாவில் பேசிய அவர், “தமிழர்களின் தொன்மையை உலகத்திற்கு சொல்லும் ஆய்வுகளை செய்ய உள்ளேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் தொன்மை தொடங்கியது. 5300 ஆண்டுகளுக்கு முன்பாகவே உருக்கு இரும்பின் தொன்மை உருவாகியுள்ளது. இதை ஆய்வின் முடிவாகவே நான் அறிவிக்கிறேன்.
தற்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் மூலம் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4000 ஆண்டின் முதற்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பு அறிமுகமாயிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறலாம்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புனே நகரிலுள்ள பீர்பால் சகானி தொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத் நகரிலுள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகிய தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும், பன்னாட்டளவில் உயரிய நிறுவனமான அமெரிக்க நாட்டு புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வகத்திற்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தேசிய நிறுவனங்களில் OSL பகுப்பாய்வும் பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க காலப் பகுப்பாய்வு செய்ய ஒரே தாழியிலுள்ள மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இத்தகைய நிறுவனங்களிடமிருந்து ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டன.
5300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பின் தொன்மை தமிழ்நாட்டில் இருந்துள்ளது என்பதை நான் பெருமையாக அறிவிக்கிறேன். தமிழ்நாட்டின் இரும்பின் அறிமுகம் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வாயிலாக நான் உலகிற்கு அறிவித்தேன்.
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும். தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள் நிறுவியுள்ளன. பொருநை ஆற்றங்கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் பயிர்தொழிலில் நெல் பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவு வெளிப்படுத்தியது.
தமிழ் – தமிழ் நிலம் – தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்தவை ஏதோ இலக்கியப் புனைவுகள் அல்ல. அரசியலுக்காகச் சொன்னவை அல்ல. வரலாற்று ஆதாரங்கள். உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த திராவிட மாடல் அரசு எடுத்துக் கொள்கிறது. ஏற்றுக் கொள்கிறது” என்று அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *