பரந்துார் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஏகனாபுரம் கிராம மக்கள் 130 பேர் மீது முதல் முறையாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் சுற்றுவட்டார பகுதியில் 13 கிராமங்கள் உள்ளது. மேலும் இப்பகுதியில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசு அறிவித்திருந்தது. அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி போன்ற கிராமங்களில் விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் அகற்றப்பட வேண்டியிருந்ததால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊர் மைதானத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி அமர்ந்து இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே ஐஐடி மச்சேந்திரநாதன் கமிட்டி கிராமத்தில் ஆய்வு செய்ய வருவதை அறிந்து கிராம மக்கள் 433-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் விமான நிலையம் அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வல்லக்கோட்டை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இரவு திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில் 60 பெண்கள், 70 ஆண்கள் என 130 பேர் மீது முதல் முறையாக சுங்குவார்சத்திரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
