சென்னையில் மே 16 அன்று ABK AOTS தோசோகாய் தமிழ்நாடு மையத்தில், எழுத்தாளர் சோம வீரப்பன் எழுதிய ‘திருக்குறள் கூறும் மேலாண்மை நெறிகள்’ என்ற புத்தகத்தின் ஜப்பானிய மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ABK AOTS மையத்தின் நிறுவனரும் தலைவருமான திரு. எம்.ஆர். ரங்கநாதன் நூலை வெளியிட்டார். ஜப்பானிய மொழிக் கல்வியில் தங்கள் மையம் தொடர்ந்து முன்னணி வகித்து வருவதாகவும், இந்த முக்கியமான மொழிபெயர்ப்பு முயற்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார். ரெனால்ட்-நிசான் டெக்னாலஜி பிசினஸ் சென்டர் (இந்தியா) நிறுவனத்தின் பொது மேலாளர் நகாதா டோமோயா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். மேலும், இந்த நூலில் திருக்குறளில் உள்ள 60 முக்கியமான மேலாண்மை கருத்துகளை சோம வீரப்பன் மிக எளிமையாகவும் அழகாகவும் தொகுத்துள்ளதாக பாராட்டினார். ஒவ்வொரு பகுதியும் ஒரு உண்மை சம்பவத்துடன் தொடங்கி, அதற்கு பொருத்தமான திருக்குறளுடன் முடிவடைவதால், இன்றைய காலத்திற்கும் திருக்குறள் எவ்வளவு பொருத்தமானது என்பதை வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் அவர் கூறினார். விழாவில் பேசிய நூலாசிரியர் சோம வீரப்பன், திருக்குறளில் மேலாண்மை, பொருளாதாரம் மற்றும் நிர்வாகம் தொடர்பான பல கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக விளக்கினார். 133 அதிகாரங்களில் 70 அதிகாரங்கள் பொருட்பாலை சார்ந்தவை என்றும், அவை இன்றைய நிறுவன தலைவர்கள், மேலாளர்கள் மற்றும் வணிக உலகிற்கும் மிகவும் பொருத்தமானவை என்றும் தெரிவித்தார்.
மனிதவள மேம்பாடு, கால மேலாண்மை, தகவல் தொடர்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் SWOT Analysis போன்ற நவீன மேலாண்மை கருத்துகள் திருக்குறளில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஜப்பானிய பதிப்பு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், பஞ்சாபி, ஓடியா மற்றும் பிரெஞ்சு மொழிகளுக்குப் பிறகு வெளியாகும் எட்டாவது மொழிபெயர்ப்பாகும். மேலும் குஜராத்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் ஜெர்மன் மொழிகளிலும் மொழிபெயர்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டது. திரு. டி. எஸ். சேகர் சாமியப்பன் (ரஷ்ய தமிழ் சங்கம்), திரு. தாமோதரன் (கொரிய தமிழ் சங்கம்), திரு. சுரேஷ் (மடகாஸ்கர் தொழிலதிபர்), திரு. சி. ராஜேந்திரன் (வாய்ஸ் ஆஃப் வள்ளுவர் அமைப்பு), திரு. பி. எல். அச்சா (பிரபல இந்தி எழுத்தாளர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

