அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தனியார் அமைப்பின் நிர்வாகி ஹரிஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஆடுதுறையில் உள்ள ஹரிஷின் வங்கி கணக்கை முடக்கி சென்னை போலீசார் பணப்பரிவர்த்தனை ஆய்வு செய்து வருகின்றனர். ஹரிஷின் வங்கி கணக்கில் 1லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், இதுவரை 50 நபர்களுக்கு போலியாக அவர் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
4 பிரபலங்களுக்கு இலவசமாக டாக்டர் பட்டம் வழங்கிவிட்டு, மீதமுள்ளவர்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு டாக்டர் பட்டம் வழங்கி மோசடியில் ஈடுபட்டதும், வசூல் செய்த பணத்தில், பாதியை நிகழ்ச்சிக்காகவும், மீதி பணத்தில் உல்லாசமாகவும் இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்கிற அமைப்பின் சார்பில் பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா கடந்த 28-ம் தேதி நடைபெற்றது.
இசை அமைப்பாளர் தேவா, சினிமா டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளரான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி சுதாகர் உள்ளிட்ட 40 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டமும் விருதும் வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் பங்கேற்று கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் விருதுகளை வழங்கினார்.
இந்த நிலையில், இந்த பட்டங்கள் அனைத்தும் போலியானது என்கிற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் ஹரிஷ் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலி டாக்டா் பட்டம் வழங்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஹரீஷ், ஆம்பூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.