மகாபாரதப் போரில் அரவானை களப்பலி கொடுத்ததை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழாவில் திருநங்கைகள் ஒன்று கூடி மணமுடித்தல், தேரோட்டம், தாலி அறுக்கும் நிகழ்வு, ஆகியன கூவாகம் கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவிலில் நடைபெறுவது வழக்கம்
இந்த திருவிழா கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று கம்காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்க தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் விழாவை வந்து கண்டுகளித்த வண்ணம் உள்ளனர். இதன் முக்கிய நிகழ்வான மண முடித்தலில் மணப்பெண் அலங்காரத்தில் வந்த திருநங்கைகளுக்கு கூத்தாண்டவர் கோயில் பூசாரிகள் தாலி கட்டி அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் விடிய விடிய கோவில் வளாகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
நாளை அரவான் பலிகளம் புகும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் அரவானை தேரில் அழைத்துச் சென்று பலியிடுவர். இதைத் தொடர்ந்து திருநங்கைகள் தங்கள் தாலிகளை அறுத்து சோகத்துடன் ஊர் திரும்பும் நிகழ்வு நடைபெறவுள்ளது.