நடிகர் மம்மூட்டிக்காக, மோகன்லால் சபரிமலையில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். நண்பனுக்காக மோகன்லால் சிறப்பு தரிசனம் மேற்கொண்டது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் வரும் மார்ச் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாவது பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ‘எம்புரான்’ படம் வெளியாவதையொட்டி நடிகர் மோகன்லால் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது மம்மூட்டியின் இயற்பெயரான ‘முஹம்மது குட்டி’ என்ற பெயரில் அர்ச்சனை செய்தார். தொடர்ந்து தனது மனைவியின் பெயரிலும் அர்ச்சனை மேற்கொண்டார்.
நடிகர் மம்மூட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், இதனால் அவர் நடிப்பிலிருந்து சில நாட்கள் ஓய்வெடுக்க இருப்பதாகவும் வதந்தி பரவிய நிலையில், இதற்கு மம்மூட்டி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும் மம்மூட்டி நலமுடன் வாழ, அவரது நண்பர் மோகன்லால் சிறப்பு அர்ச்சனை செய்திருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றுள்ளார் மோகன்லால். கடந்த 2015-ம் ஆண்டு ‘புலிமுருகன்’ படம் வெளியான சமயத்தில் அவர், சபரிமலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
