தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றது. பெரிதும் எதிர்பார்த்த அண்ணாமலை உள்ளிட்ட பாஜக அதிமுக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்தனர். தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னணியில் இருந்தார். ஆனால் முடிவில் திமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றார்.
இதேபோல் விருதுநகரில் நடிகர் விஜயகாந்தின் மகன், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பின்னடைவை சந்தித்தார். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இதையடுத்து தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது.
மக்களவைத் தேர்தல் 2024
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் இந்திய தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
