புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இது போன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்து செல்லப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 2025ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் அழைத்து வரப்பட்டதாக எம். காமேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த செயல் சட்டப்படி தவறானது என்றும், சிறார் நீதிச் சட்டத்துக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ள மனுதாரர் மது அருந்தும் இடத்தில் குழந்தைகளை அனுமதித்த நட்சத்திர விடுதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.
மேலும் வரும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இது போன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அப்போது வரும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்து செல்வதாக புகார்கள் வந்தால் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

