ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ள LVM3-M6 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த AST SpaceMobile நிறுவனத்தின் ‘BlueBird-6’ தொடர்பு செயற்கைக்கோளை சுமந்து செல்லும் இந்த கனரக ராக்கெட், நாளை டிசம்பர் 24 காலை 8.54 மணிக்கு விண்ணில் பாயவுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.இந்த ஏவுதல், இந்தியாவின் கனரக ஏவுகணை திறனை உலகிற்கு மீண்டும் நிரூபிக்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. ‘BlueBird-6’ செயற்கைக்கோள், நேரடி மொபைல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுதலின் மூலம், வணிக ரீதியான சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பில் இந்தியாவின் பங்கு மேலும் வலுப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏவுதல் தொடர்பான அனைத்து பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாகவும், இஸ்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

