2021-ல் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பின் தொடர்பான விவகாரத்தில், மெட்டா நிறுவனம் வணிக ஆதாயம் அடிப்படையில் தவறான முறையில் செயல்பட்டதற்காக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) திங்களன்று ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும், சிசிஐ இந்த நடைமுறையை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான தீர்வுகளை மெட்டா மற்றும் வாட்ஸ்அப் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செயல்படுத்த வேண்டும் என்றும், வாட்ஸ்அப் தளத்தில் சேகரிக்கப்படும் பயனர்களின் தரவுகளை மெட்டாவின் பிற தளங்களுடன் விளம்பர நோக்கங்களுக்காக பகிர்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் சேவையை பயனர்களுக்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் வழங்க வேண்டும் என சிசிஐ தெரிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதற்காக, சிசிஐ மெட்டாவுக்கு ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது. 2021 ஜனவரியில், வாட்ஸ்அப் தளத்தில் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை புதுப்பிப்பு குறித்து பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்த இந்த அறிவிப்பில், வாட்ஸ்அப் சேவையை தொடர்ந்தும் பயன்படுத்த, தரவுகளை சேகரிக்கும் விதிமுறைகள் மற்றும் மெட்டா நிறுவனங்களுடன் கட்டாயமாக தரவுகளை பகிர வேண்டும் என பயனர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என கூறியது. இந்தியாவில் சுமார் 50 கோடிக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைவும் மெட்டா நிறுவனம் நிர்வகிக்கிறது.

