செய்திகளை பரிமாறிக் கொள்ள, மற்றவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பக் காலத்தில் மக்கள் கடிதங்களை பயன்படுத்தினர். பிறகு தொலைதொடர்பு, தொழில்நுட்பம் வளர்ந்து தொலைபேசிகள் மக்களின் தொடர்பை சற்று எளிமையாக்கியது. அதன்பின் அலைபேசிகள் எங்கும், எப்போதும் யாரையும் தொடர்கொள்ள மிகவும் எளிதான சூழ்நிலையை உருவாக்கியது. நவீன உலகில் தொழில்நுட்பத்தின் மற்றொரு வளர்ச்சியாக சமூகவளைதலங்கள் பார்க்கப்படுகின்றன. சமூகவளைதலங்கள் மூலமாக வேறொருவர் தனிப்பட்ட கணக்கிற்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி உண்டாகிறது. தனிப்பட்ட உரையாடலும் மேற்கொள்ள முடிகிறது. இதனால் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள மிகவும் எளிதான வாய்ப்பு அமைகிறது.
இவ்வாறு சமூகவளைதலங்களால் நன்மைகள் இருப்பினும், தீமைகளும் அதே அளவிற்கு இருக்கிறது. சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவளைதலங்கள் இன்றைய இளைய சமுதாயம் மத்தியில் பிரபலம். இணையத்தில் தங்கள் தனிப்பட்ட கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்கள் யாரும் பதிவிறக்கம் செய்ய வழிவகை இருக்கிறது. இதனால் அப்புகைப்படங்களை, குறிப்பாக பெண்களின் புகைப்டங்களை இணையத்தில் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. சைபர் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனைத் தடுக்க பலக் கட்டுப்பாடுகள் இருப்பினும், சைபர் குற்றப்பிரிவை அரசு உருவாக்கி கண்காணித்தாலும் குற்றங்கள் குறைவதாக இல்லை.
இளைய சமுதாயம் தங்களுக்கு ஏற்படும் ஆபத்தை உணராமல் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பொதுவெளியில் வெளியிடுவதை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதே போல முகமறியாத நபர்கள் தொடர்பில் இருப்பதை தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக பிரபலங்கள் இணையத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அளவற்ற சமூகவளைதலங்களின் பயன்பாடு மிகவும் ஆபத்தானது என இன்றைய இளைய சமுதாயம் நிச்சயம் உணர வேண்டும்.