ஓடிசா மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சியமைக்கும் நிலையில், முதலமைச்சராக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 14, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 மற்றும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதையடுத்து, 24 ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் பதவி விலகினார்.
4 முறை பாஜக எம்.எல்.ஏ.வான மோகன் மாஜி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். 52 வயதான மோகன் மாஜி கியோன்ஜார் தொகுதியில் 87,000 வாக்கு வித்தியாசத்தில் பிஜு ஜனதா தளத்தின் மினா மாஜியை தோற்கடித்தார்.
புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பு விழா நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.