ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்நாடு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹோர்முஸ் நீரிணையை மூடிவைத்துள்ளது. இதனால், உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவும் இதனால் கடுமையாக பாதித்துள்ளது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை அன்று ஈரானுக்கு முடிவு கட்டப்படும். ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் கடுமையான தாக்குதல் நடத்தப்படும். ஈரானியர்கள் நரகத்தில் வாழ்வார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 5ஆம் தேதி ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தக் காலக்கெடு இன்று காலை 5.30 மணியோடு நிறைவடைய இருந்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஒட்டுமொத்த நாகரிகமே (ஈரான்) அழியப்போகிறது. அது ஒருபோதும் மீண்டு எழாது. 47 ஆண்டுகால அச்சுறுத்தல், ஊழல் உள்ளிட்டவை ஒருவழியாக முடிவுக்கு வரும். ஈரான் மக்களுக்கு இறைவனின் ஆசி கிடைக்கட்டும்” என பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
இதற்கிடையே தான் டிரம்ப் விதித்த காலக்கெடு முடிவடைய 2 மணி நேரங்களுக்கு முன்பு மாற்று முடிவை எடுத்தார் டிரம்ப். இதற்கு காரணம் பாகிஸ்தான். டிரம்ப்பின் மிரட்டலை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த ஆலோசனையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆலோசனைக்கு பின் இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தத்துக்கு டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோல் போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான் அளித்துள்ள 10 அம்ச கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் இதை ஒரு “இருதரப்பு போர் நிறுத்தம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தம் செய்யப்படும் இந்த இரண்டு வாரங்களுக்கு ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதித்துள்ளது. இடைக்கால போர் நிறுத்தம் செய்ய உதவியதற்காக பாகிஸ்தானுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ள நிலையில், நிரந்தர போர் நிறுத்தத்திற்கான அமைதி பேச்சுவார்த்தை வருகிற ஏப்ரல் 10ம் தேதி இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது.

