இஸ்ரேல், அமெரிக்காவுடன் மோதல் நடைபெறும் நிலையில் ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஈரானின் தேவையைப் பொறுத்து அந்த நாட்டுக்கு உதவிகளை ரஷ்யா வழங்கத் தயார் என மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்- ஈரான் மோதலில் சமரசம் செய்ய தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷ்யா சென்றுள்ளார். அவர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார். இருவரும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து விவாதித்தனர். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் நெருக்கடிக்கு மத்தியில் ஈரானிய மக்களுக்கு ஆதரவாக ரஷ்யா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல், அமெரிக்கா ஈரான் உடன் மோதல் நடைபெறும் நிலையில், ஈரானுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் இரு நாடுகளுக்கு இடையே சமரசம் செய்து வைக்கவும் தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில், அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவை வன்மையாக கண்டிக்கிறேன் என ரஷ்யா அதிபர் புடின் கூறியுள்ளார்.

