அடையாளம் காண சேவைக்கான அட்டை மட்டுமே ஆதார்,பான் இருந்தால் மட்டும் இந்திய குடிமகன் ஆக முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் நீதி மன்றம்

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் வாழும் பாபு அப்துல் ரூப் சர்தார் என்பவர், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச நாட்டவர் எனக் கூறப்படுகிறது. இவர் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இந்திய பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை போலியாக வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போலி ஆவணங்களுடன் இந்தியாவில் தங்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அமித் போர்கர் கூறுகையில், ‘ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பது மட்டுமே ஒருவரை இந்திய குடிமகனாக மாற்றாது. இந்த ஆவணங்கள் அடையாளம் காண அல்லது சேவைகளைப் பெறுவதற்காக மட்டும்தான். சட்டப்பூர்வ குடிமக்களுக்கும், சட்டவிரோத குடியேறிகளுக்கும் இடையே இந்தச் சட்டம் ஒரு தெளிவான கோட்டை வரைகிறது. இந்த வேறுபாடு முக்கியமானது. ஏனெனில், இது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கிறது. இது இந்திய குடிமக்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகள், சட்டவிரோதமாக குடியேறியவர்களால் பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது’ என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *