தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 700 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்பு.

சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள் தமிழ்நாடு விளையாட்டு

76-வது சீனியர் தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள சைக்கிள் ஓடுதளத்தில் நாளை (நவம்பர் 15-ம் தேதி) தொடங்குகிறது மற்றும் 19-ம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் 52-வது ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். சர்வதேச சைக்கிளிங் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த போட்டியை நாளை (15-ம் தேதி) தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்திலிருந்து மட்டும் 40 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் கலந்து கொள்கின்றனர்.தமிழகத்தைச் சேர்ந்த தான்யா, ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றுள்ளார். சீனியர் சாம்பியன்ஷிப்பில் 19 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான எலைட் ஆடவர் பிரிவில், ஆயிரம் மீட்டர் தனிநபர் டைம் டிரையல், ஸ்பிரின்ட், 4 ஆயிரம் மீட்டர் தனிநபர் பியூர்சூட், ஓம்னியம், கெய்ரின், 15 மீட்டர் ஸ்கிராட்ச் ரேஸ், 4 ஆயிரம் மீட்டர் அணிகள் பியூர்சூட், அணிகள் ஸ்பிரின்ட் (3 ரைடர்கள், 3 சுற்று), மேடிசன் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.எலைட் மகளிர் பிரிவில் 500 மீட்டர் தனிநபர் டைம் டிரையல், ஸ்பிரின்ட், 3 ஆயிரம் மீட்டர் தனிநபர் பியூர்சூட், ஓம்னியம், கெய்ரின், 10 மீட்டர் ஸ்கிராட்ச் ரேஸ், 4 ஆயிரம் மீட்டர் அணிகள் பியூர்சூட் (3 ரைடர்கள்), அணிகள் ஸ்பிரின்ட் (3 ரைடர்கள், 3 சுற்று) எனும் வகைகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. மேலும், ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பிரிவுகளிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. சீனியர் பிரிவில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெறும் புள்ளிகள் உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிக்கு கணக்கில் கொள்ளப்படும். அதனால் போட்டியாளர்கள் வெற்றி பெற முழு முயற்சி செய்வர் என எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *