200 ஆண்டுகால வரலாற்றை கொண்ட பிரிட்டிஷ் நாளிதழான ‘தி கார்டியன்’ இனி எக்ஸ் தளத்தில் எந்தவொரு பதிவும் செய்யாது என அறிவித்துள்ளது. 1821ஆம் ஆண்டு லண்டனில் ‘மான்செஸ்டர் கார்டியன்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நாளிதழ், 1959ஆம் ஆண்டில் ‘தி கார்டியன்’ என பெயர் மாற்றம் செய்தது. தற்போது நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது எக்ஸ் தளத்தின் மூலம் அதன் சிஇஓ எலான் மக்ஸின் நச்சு கருத்துகளை பரப்பியதற்கான விளைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கார்டியன் நிறுவனம் கூறியுள்ளது. இதற்கான பின்னணியில், லண்டனில் உள்ள பாரம்பரிய ‘தி கார்டியன்’ நாளிதழ், எதிர்காலத்தில் எக்ஸ் தளத்தில் எந்தவொரு பதிவும் பகிரப்படாது என்றும் எங்கள் நிறுவனம் எக்ஸ் தளத்தில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளது. தங்கள் செய்தியாளர்களுக்கான கணக்குகள் மட்டும் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது. ‘தி கார்டியன்’ நாளிதழுக்கு 30க்கும் மேற்பட்ட கணக்குகள் உள்ளன. இவற்றை சுமார் 2 கோடி பேர் பின் தொடர்கின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலின் போது எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்த ‘தி கார்டியன்’ என்ற நாளிதழின் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

