இஸ்ரோ மூலம் பொதுமக்களின் செல்போன்களுக்கு நேவிகேஷன் சிக்னல் வழங்கும் திட்டம்

இந்தியா சிறப்பு செய்திகள் விண்வெளி சார்ந்தவை

விண்வெளியில் 7 வழிகாட்டி செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான திட்டத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளதாக இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்தார். அவர் கூறியதாவது, பொதுமக்களுக்கு தங்கள் இருப்பிடத்தை பற்றிய தகவல்களை எளிதில் பெறுவதற்காக, இந்தியா தனது சொந்த நேவிகேஷன் அமைப்பான நேவிக் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, புதிய எல்1 பேண்டுடன் 7 நேவிகேஷன் செயற்கைக்கோள்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதில், ஒரு செயற்கைக்கோள் ஏற்கெனவே விண்ணில் ஏவப்பட்டுள்ளது, மேலும் மற்ற 6 செயற்கைக்கோள்கள் விரைவில் ஏவப்படும். ஏற்கெனவே விண்ணில் உள்ள நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் எல்5 மற்றும் எஸ் பேண்டில் செயல்பட்டு வருகின்றன. எங்களின் அடுத்த இலக்கு விண்வெளி சட்டத்தை உருவாக்குவதாகும். இதற்கான வரைவு சட்டத்தை நாங்கள் தயார் செய்துள்ளோம். ஆலோசனை முடிந்த பிறகு, இது மத்திய அரசுக்கு அனுப்பப்படும் மற்றும் அமைச்சரவை ஒப்புதலுக்காக காத்திருக்கும். உலகளவில் சிறு செயற்கைக்கோள் சந்தை 5.2 பில்லியன் டாலருக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, இதில் முக்கிய பங்குகளைப் பிடிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காகவே, இஸ்ரோவின் சிறிய ராக்கெட்டான எஸ்எஸ்எல்வி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த ராக்கெட்டின் தொழில்நுட்பம் இரண்டு ஆண்டுகளில் தனியார் துறைக்கு வழங்கப்படும். தமிழகத்தின் குலசேகரபட்டினம் விண்வெளி தளத்தில் இருந்து இந்த சிறிய ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் ஏவப்படும். எஸ்எஸ்எல்வி ராக்கெட், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களான அக்னிகுல் மற்றும் ஸ்கைரூட் ஆகியவற்றின் ராக்கெட்டுகள், சிறிய செயற்கைக்கோள்களின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *