நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது. மேலும், போடே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் குறுக்கே அமைந்திருந்த நீர்மின் நிலையங்களின் சுரங்கங்கள் வெள்ளத்தில் சேதமடைந்தன. இந்த சுரங்கங்களில் 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, சுரங்கங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவத்தினர் கடந்த 9 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியில் இந்தியாவைச் சேர்ந்த சுரங்க மீட்பு தொழில்நுட்ப நிபுணர்களும் உதவி வருகின்றனர்.இந்நிலையில், திரிசூலி நீர்மின் திட்டத்தின் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த 2 பேரை நேபாள ராணுவத்தினர் இன்று காலை உயிருடன் மீட்டுள்ளனர். அவர்கள் சஞ்சய் ஷா மற்றும் கபீர் மகாராஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இருவரும் ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சுரங்கத்துக்குள் இன்னும் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணியை நேபாள ராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளவர்கள் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனை குழாய்கள் மூலம் மீட்புக் குழுவினர் தொடர்ந்து செலுத்தி வருகின்றனர். 9 நாட்களுக்குப் பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது, சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள மற்றவர்களும் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த மீட்பு சம்பவம் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

