சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 88 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களில் பலத்த மழை கொட்டுகிறது. இதனால், பல இடங்களில் வாகனங்கள் நடுவழியில் சிக்கி தவித்தன. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் தவித்து வந்தனர். அவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சல பிரதேசம் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. 1,300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. 333 வீடுகள் சேதமடைந்துள்ளன. சிம்லா-மணாலி, சண்டிகர்-மணாலி, சிம்லா-குல்கா தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 16 பேரை காணவில்லை என்றும், 100 பேர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் 492 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்நிலையில், மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, பழங்குடியின லாஹவுல்-ஸ்பிடி மாவட்டம் மற்றும் குலு மாவட்டத்தின் மணாலி பகுதியில் இடைவிடாத மழையால் ஏற்பட்ட அழிவுகளை ஆய்வு செய்ய சிசு, சந்தர்தல், லோசார் ஆகிய இடங்களில் வான்வழி ஆய்வு செய்தார். அப்போது, ‘கடுமையான பனிப்பொழிவு காரணமாக சந்தர்தாலில் நிலைமை சவாலானதாக இருந்தபோதிலும், முகாம்களில் தங்கியிருந்த 293 பேரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்தது. ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு முயன்று வருகிறது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன்’ என்று முதல்வர் கூறினார்.
இமாச்சலில் உள்ள கிண்ணாரின் கரா பகுதியில் ஆடு மேய்க்கவும் மலையேற்ற பயிற்சியில் ஈடுபடவும் சென்ற 28 பேர் திரும்ப முடியாமல் சிக்கி தவித்தனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் துணிச்சலாக செயல்பட்டு ஒருவர் பின் ஒருவராக, கயிறு கட்டி மீட்டனர். இந்த பணியில், அவர்களுடன் இந்தோ-திபெத் எல்லை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரும் ஈடுபட்டனர். கனமழை பெய்தபோதும், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி பயணம் தடைப்பட்டபோதும், உள்ளூர் பள்ளியில் இரவு முழுவதும் தங்கியிருந்து, அடுத்த நாள் காலை மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு கயிறுகள் உள்ளிட்ட பொருட்களுடன் சென்று அவர்களை மீட்டனர். இதேபோன்று, நீர்மட்டம் அதிகரித்ததில், கப்னு கிராமத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சிக்கி தவித்த 11 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

