இந்தியாவில் போலி சிம் கார்டுகள் மற்றும் செல்போன் இணைப்புகள் மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க, மத்திய தொலைத்தொடர்பு துறை புதிய கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்த உள்ளது. இதன்படி, ஒரு நபர் தனது பெயரில் வைத்திருக்கக்கூடிய செல்போன் இணைப்புகளுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.நாடு முழுவதும் ஒரு தனிநபர் அதிகபட்சமாக 9 செல்போன் இணைப்புகள் வரை வைத்திருக்க அனுமதி உள்ளது. அதே நேரத்தில், ஜம்மு-காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்கள் அதிகபட்சம் 6 செல்போன் இணைப்புகள் மட்டுமே வைத்திருக்க வேண்டும். இந்த விதி பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறையில் இருந்தாலும், சிலர் வெவ்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் இந்த வரம்பை மீறி பல சிம் கார்டுகளைப் பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.இதனைத் தடுக்க, நிர்ணயிக்கப்பட்ட சிம் கார்டு எண்ணிக்கையை ஏற்கனவே எட்டிய வாடிக்கையாளர்களுக்கு புதிய சிம் கார்டுகளை வழங்குவதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், ஒருவர் புதிய சிம் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஏற்கனவே தனது பெயரில் செயல்பாட்டில் உள்ள பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செல்போன் எண்களையும் தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்களை சரிபார்க்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசின் Digital Intelligence Platform-ஐ பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.புதிய முறையின் ஒரு பகுதியாக, புகைப்பட அடிப்படையிலான அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஒருவரின் பெயரில் ஏற்கனவே எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை துல்லியமாகக் கண்டறிந்து, அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறியவர்களுக்கு புதிய சிம் கார்டு வழங்குவது தடுக்கப்படும்.மேலும், தொழில்நுட்ப மாற்றங்களை முழுமையாக செயல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நவம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தவறுதலாக அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி கூடுதல் சிம் கார்டு வழங்கப்பட்டால், அந்த இணைப்பு உடனடியாக ஒரு நாள் முடக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம், போலி அடையாளங்களில் சிம் கார்டுகள் பெறப்படுவதை தடுப்பது, சைபர் மோசடிகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளின் தவறான பயன்பாட்டை கட்டுப்படுத்துவது ஆகும். குறிப்பாக, மோசடி அழைப்புகள், போலி ஆவணங்கள் மூலம் பெறப்படும் சிம் கார்டுகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்படும் செல்போன் இணைப்புகளை கண்டறிவதில் இந்த கண்காணிப்பு முறை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

