கனடா அரசு வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை தடுக்கும் நோக்கில் புதிய விசா விதிமுறைகளை செயல்படுத்தியுள்ள நிலையில், 4.2 லட்சம் இந்திய மாணவர்களின் நிலைமை சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. இந்த புதிய நடவடிக்கை இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினருக்கு சிக்கல்களை உருவாக்க வாய்ப்பு உள்ளதால், கனடாவில் வேலைக்காக செல்லும் அல்லது குடியேற விரும்பும் நபர்களுக்கு இது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் வெளிநாடுகளில் இருந்து வந்த மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் தங்கும் விசா நிலையை எந்த நேரத்திலும் மாற்றுவதற்கான அதிகாரம் கனடா எல்லைப் படை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின் அடிப்படையில், பாதுகாப்பு விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின் கீழ், மின்னணு விசா மற்றும் தற்காலிக தங்கும் விசா போன்றவற்றை மாற்றவோ, நிராகரிக்கவோ கனடா எல்லைப் படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கனடாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விசா காலம் முடிவுக்கு வந்த பிறகும், அவர் நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என கனடா அதிகாரிகள் கருதினால், அவரது விசா காலம் முடிவுக்கு வரும் முன்பே ரத்து செய்யும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாணவர்கள் மற்றும் சட்டப்படி குடியேறியவர்கள் மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக கனடா உள்ளது . இந்நிலையில், தற்போது கனடாவில் உயர்கல்வி படித்து வரும் 4.2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. 2024ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 3.6 லட்சம் இந்தியர்களுக்கு கனடா அரசு பயண விசா வழங்கியது ,மாணவர்கள் மற்றும் சட்டப்பூர்வமாக குடியேறியவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படின், அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா – கனடா இடையே ஏற்கனவே காலிஸ்தான் விவகாரத்தில் நிலவும் நிலையில் , புதிய விசா விதிமுறைகள் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.

