உலகின் மிக உயரிய திரைப்பட விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் என்ற பிரிவுக்கு பல நாடுகளிலிருந்து பல திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. இந்தியா சார்பிலும் திரைப்படங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த ஆண்டு, மலையாள திரைப்படமான 2018 என்ற படம் இந்த பிரிவுக்கு அனுப்பப்பட்டது.ஆனால், அந்த படம் நாமினேஷன் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் 2025ஆம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக பாலிவுட் படமான ‘லப்பட்டா லேடிஸ்’ தேர்ந்தெடுக்கப்பட்டதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இயக்குநர் கிரண் ராவ் இயக்கிய இந்த படம், நிதான்ஷி கோயல், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரதிபா ரந்தா போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். ராம் சம்பத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில், இரண்டு திருமணமான இளம் பெண்கள் தங்கள் கணவரின் வீட்டிற்கு செல்லும் போது வழியில் ஆள்மாறி சென்ற நிலையில், பெண்கள் தங்கள் கணவரிடம் சென்றார்களா இல்லையா என்பதை காமெடி மற்றும் அரசியல் நையாண்டி கலந்த கதையாக உருவாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆஸ்கர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படும் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் இறுதி பரிந்துரையில் ‘லப்பட்டா லேடிஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.மேலும் இறுதி பரிந்துரை பட்டியலில் 6 தமிழ் படங்கள், 10 இந்தி படங்கள், 5 மலையாளப் படங்கள், 3 மராத்தி படங்கள் உட்பட மொத்தம் 28 படங்கள் இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தமிழ் சினிமாவில் கொட்டுக்காளி, வாழை, தங்கலான், ஜமா, மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய 6 படங்கள் இடம்பெற்றன. இதில் ‘லப்பட்டா லேடிஸ்’ இறுதியாக தேர்தெடுக்கபட்டது.