ராஜஸ்தான் மாநிலத்திற்கு நவம்பர் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் தேதியை நவம்பர் 25க்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவு பெற உள்ளது. எனவே இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தேர்தல் தேதியை நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 23ம் தேதி முகூர்த்த நாள் என்பதாலும் அன்றைய தினம் மாநிலம் முழுவதும் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும், அதேபோல் சமூகம் சார்ந்த பல விழாக்கள் அன்றைய தினம் நடைபெறுவதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று நவம்பர் 23க்கு பதிலாக நவம்பர் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கண்ட அனைத்து மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகளும் வெளியாக உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாக இந்த 5 மாநிலத் தேர்தல்கள் கருதப்படுவதால் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.