என்னோட கள அரசியல் பயணம் உங்களின் ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து தான் தொடங்குகிறது.” என்று பரந்தூர் விவசாயிகள் முன்னிலையில் தவெக தலைவர் விஜய் பேசினார்.
சென்னையின் 2 ஆவது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூர், தண்டலம், மகாதேவி, நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்து 100 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால், அந்த கிராமத்தை மையமாக வைத்து 900 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை இன்று சந்தித்தார். பரந்தூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தவெக கொடி கட்டிய பிரச்சார வாகனத்தில் பரந்தூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்துக்கு வருகை தந்த விஜய், விவசாயிகள் முன்னிலையில் பேசினார். அதில், “கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேல் உங்கள் மண்ணுக்காக போராடுகிறீர்கள். உங்கள் போராட்டத்தை பற்றி ஒரு சிறுவன் பேசியது எனது மனதை ஏதோ பண்ணியது. உடனே உங்களை எல்லாம் பார்க்கணும் தோணுச்சு. உங்க கூட பேசிய ஆகணும்னு தோணுச்சு. உங்க எல்லார் கூடயும் நிற்பேன், தொடர்ந்து நிற்பேன் என உங்ககிட்ட சொல்லணும் தோணுச்சு.
ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான். அதேபோல் நமது நாட்டுக்கு முக்கியமானவர்கள் விவசாயிகள். அந்த விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டு எனது பயணத்தை தொடங்க வேண்டும் என்று முடிவோடு தான் இருந்தேன். அதற்கு சரியான இடம் இதுதான் என எனக்கு தோன்றியது.
உங்கள் வீட்டில் உள்ள ஒரு மகனாக என்னோட கள அரசியல் பயணம், உங்களின் ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து தான் தொடங்குகிறது. தவெக மாநாட்டில் கொள்கையை அறிவித்தோம். இதனை இங்கே சொல்ல காரணம் ஓட்டு அரசியலுக்காக அல்ல. இந்த பிரச்சினையில் நான் உங்களோடு உறுதியாக நிற்பேன்.
விமான நிலையத்துக்காக ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுக்கு வலியுறுத்துகிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடமாக பார்த்து விமான நிலையத்தை கொண்டுவாருங்கள்.
வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம். வளர்ச்சியின் பெயரால் நடக்கும் அழிவு மக்களை மிக அதிகமாக பாதிக்கும். மக்கள் உங்கள் தெய்வங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்காதீர்கள். உங்களுக்காகவும், உங்கள் ஊருக்காகவும் இனி உங்க வீட்டு பிள்ளையான நானும், தவெகவும் சட்டத்துக்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களோடு உறுதியாக நிற்பேன்.
ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் உங்களை சந்திப்பது தான் எனது திட்டம். ஆனால், என்னை அனுமதிக்கவில்லை. நான் ஏன் ஊருக்குள் வர தடை விதிக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதேபோல் சில நாட்கள் முன், துண்டு சீட்டு கொடுத்ததற்கு தடை விதித்தார்கள். அதுவும் ஏன் எனத் தெரியவில்லை. நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்.” என்று பேசினார்.

