திரையுலகில் நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், நேற்று வெளிவந்துள்ள அவரது கூலி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரஜினிகாந்த் திரையுலகில் பொன்விழா கொண்டாடுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன் லால் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “அனைவருக்கும் 79 ஆவது சுதந்திர தின வாழ்த்துகள். என் நண்பரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், “உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. நீண்ட காலமாக நான் மதிக்கும் தலைவரிடம் இருந்து வாழ்த்து பெறுவதை பாக்கியமாக கருதுகிறேன். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.

