கேரளா: கேரளாவில் மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். போலீசார் மற்றும் மாவோயிஸ்டுகளிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே போலீசாரும் வனப்பகுதிகள் மற்றும் மாநில எல்லை சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் கோழிக்கோடு மாவட்டம் தலப்புலாவில் உள்ள மவோயிஸ்டுகள் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு பிறகு 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 3 மாவோயிஸ்டுகளை தேடி வந்தனர். கேரள நக்சல் தடுப்பு போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த நிலையில் கேரளா- கண்ணூர் ஆயம்குன்று உருப்புகுற்றி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் போலீசார் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
போலீசாரை நோக்கி மாவோயிஸ்டுகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு போலீசார் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்டுகள் 2 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மாவோயிஸ்ட் தடுப்பு நடவடிக்கையில் தண்டர் போல்ட்ஸ் சிறப்பு ஆயுதப்படை ஈடுபட்டுள்ளனர். கண்ணூர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து மாவோயிஸ்டுகள் தப்பிச் சென்றனர். தப்பிச் சென்றவர்கள் விட்டுச் சென்ற 3 துப்பாக்கிகளை பறிமுதல் செய்த ஆயுதப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
