டெல்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரிஃப்-ன் கருணை மனுவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நிராகரித்துள்ளார்.
2000-ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி செங்கோட்டையில் அனுமதி இன்றி நுழைந்த பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, தாக்குதல் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு முகமது ஆரிப் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இவர் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் எனவும் தெரிய வந்தது. அவருக்கு எதிரான வழக்கில் 2005ம் ஆண்டு அக்டோபரில் முதலில் குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் அந்த வழக்கின் நிறைவாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னதாக 1999ம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த ஆரிப் மற்றும் 3 லஷ்கர் பயங்கரவாதிகளும், ஸ்ரீநகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து செங்கோட்டையைத் தாக்கும் திட்டத்தைத் தீட்டினர். அத்திட்டத்தின்படி செங்கோட்டைக்குள் நுழைந்த அபு ஷாத், அபு பிலால் மற்றும் அபு ஹைதர் ஆகிய மூன்று பயங்கரவாதிகளும் தனித்தனி என்கவுன்டர்களில் கொல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட முகமது ஆரிஃபின் மரண தண்டனையை 2007 செப்டம்பரில் டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. தொடர்ந்து 2011-ல் உச்ச நீதிமன்றம் அவரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ஆனால், அந்த மரண தண்டனைக்கு எதிராக அவர் மறு ஆய்வு மனு செய்ய, அதுவும் ஆகஸ்ட் 2012ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் ஜனவரி 2014-ல் ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.
செங்கோட்டை தாக்குதல் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிரான அச்சுறுத்தல் என்று 2022-ல் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. அதன்படி நவம்பர் 2022-ல், உச்ச நீதிமன்றம் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து, அவரது மரண தண்டனையை உறுதி செய்தது.
இதையடுத்து, முகமது ஆரிஃப் கடைசி வாய்ப்பாக குடியரசுத் தலைவருக்கு கருணை மனு விண்ணப்பித்தார். மே 15ம் தேதி அன்று பெறப்பட்ட கருணை மனுவை இன்று பரிசீலித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அம்மனுவை நிராகரித்தார். கால்நூற்றாண்டு சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் முகமது ஆரிஃபுக்கான மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் எனத் தெரிய வருகிறது.