கோயில் நகரம் என அழைக்கப்படுகிற கும்பகோணம் மகாமகம் குளத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக நட்சத்திரத் தினத்தில் மாசி மகாமகப் பெருந்திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதே விழா மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
2023-ல் மார்ச் 6ஆம் தேதி மகாமக திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக கும்பகோணத்தில் உள்ள 12 சிவ ஆலயங்கள், 5 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. மாசிமகத் திருவிழாவில் கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். மகாமக குளத்தில் பக்தர்கள் அதிகாலை முதல் புனித நீராடுவார்கள். இதனைத் தொடர்ந்து மாலை நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் மகாமககுளத்தில் மகா ஆரத்தி நடைபெறும். மாசி மகாமகத்தின் போது உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து
கும்பகோணத்திற்கு பல லட்சம் பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த மாசி மகாமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று விழா. இதனால் பாதுகாப்பு கருதி திருவிழா நடக்கும் இடத்தின் அருகில் உள்ள கடைகளை மூடவும், உள்ளூர் விடுமுறை அளிக்கவும் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
