டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியை தக்கவைத்து கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்கிறார். வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்காகாந்தி போட்டியிடவுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முதல்முறையாக தேர்தல் அரசியலில் நுழைகிறார். நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி அபார வெற்றிபெற்றார். அதேவேளை, ராகுல் காந்தி ஏதேனும் ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக இன்று ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து, வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
