நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த போலி ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர முயற்சி நடைபெறுவதாக டெல்லி இணையதள குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலி படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ‘டீப் ஃபேக்ஸ்’ (Deep Fake) என்று பெயர். இதன்மூலம் ஒரு புகைப்படத்திலோ அல்லது வீடியோவிலோ இருக்கும் ஒருவரது முகத்தை அவரின் விருப்பம் இல்லாமலேயே இன்னொரு நபரின் முகத்தின் மேல் பொருத்த முடியும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பிரபலங்களின் போலியான வீடியோக்கள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன. அந்த வகையில், அண்மையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. அதில் அவர் ஆபாசமான உடை அணிந்தது போல இடம்பெற்றிருந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இதுதொடர்பாக டெல்லி போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் டெல்லி மகளிர் ஆணையத்தின் கடிதத்தில் அடிப்படையில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர முயற்சி நடைபெறுவதாகவும் டெல்லி இணையதள குற்றக்காவல் பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பாலிவுட் ஜாம்பவான் அமிதாப்பச்சன், அந்த டீப் ஃபேக் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ ட்வீட் செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது கண்டனத்தை அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல் துறை தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மெட்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களிலிருந்து தகவல்களைப் பெற முயற்சிப்பதாகவும், இதுவரை யாரும் கைதுசெய்யப்படாத நிலையில் தொழில்நுட்ப ஆய்வு நடைபெறுவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.