இந்தியா, மலேசியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இன்றி இலங்கை வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலகில் மிக பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அந்த நாட்டின் வருவாயின் பெரும்பங்கு சுற்றுலாத்துறையின் மூலமே கிடைக்கிறது. இந்த சூழலில், சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வண்ணம் புதிய அறிவிப்பை அந்நாட்டு சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் விசாவுக்காக செலவிடும் தொகையும், காத்திருக்க வேண்டிய நேரமும் மீதமாகும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்பைக் கொண்டுள்ள தமிழகத்தில் இருந்து, அந்நாட்டுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அண்மையில் தொடங்கப்பட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், இலவச விசா அறிவிப்பால் இலங்கைக்கு செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

