கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க கல்வராயன்மலை பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் 5 காவல் ஆய்வாளர்கள், 7 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து மதுவிலக்கு குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரின் உத்தரவின்பேரில் நேற்றும், இன்றும் தனிப்படையினர் நடத்திய அதிரடி மதுவிலக்கு சோதனையில் கல்வராயன்மலை பகுதியல் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் சுமார் 1000 லிட்டர் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டது.
மேலும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 64 நபர்கள் மீது 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1864 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 180 மி.லி அளவு கொண்ட 139 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களில் 59 (ஆண்கள்-41, பெண்கள்-18) குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.