இலங்கையில் இருந்து நெருக்கடி நிலை காரணமாக கடல் வழியாக தப்பி வந்த 13 குடும்பங்களைச் சார்ந்த 39 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர், இவர்களில் 11 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் ஒரு கை குழந்தை உட்பட 17 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரயும் மண்டபம் முகாமில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே, 19,223 குடும்பங்களைச் சேர்ந்த 58,547 நபர்கள் தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மறுவாழ்வு முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கு தங்குமிடம், குடிநீர் வசதி, மின்சார வசதி, கருணைத் தொகை, குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் கல்வி உதவித் தொகை, அத்தியாவசியப் பொருட்கள், மானிய விலையில் ஓராண்டுக்கு ஐந்து சிலிண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார். அவர்களது அத்தியாவசியத் தேவை மற்றும் நலன் குறித்தும் விசாரித்தார்கள்.
இந்நிகழ்வில். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், செஞ்சி. கே. எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் டி. ஐகந்தாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத், மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.