ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளர். இடிபடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்புக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினம் – ராயகடா விரைவு ரயில் மோதியதில், ராயகடா ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டன. ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகுறது. ஆந்திராவின் கண்டகப்பள்ளியில் ரயில் விபத்துக்குள்ளான இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன.
விசாகப்பட்டினம், அனகப்பள்ளி மாவட்டங்களில் இருந்து தேவையான அளவு ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்ப ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆணையிட்டுள்ளார். அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்ய ஆந்திர முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
கண்டகப்பள்ளியில் சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பலாசா பயணிகள் ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து உதவி எண்கள் அறிவிக்கபட்டுள்ளது. புவனேஸ்வர்- 0674-2301525, 2303069, வால்டெயர் 0891-2885914 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.