பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா முதலாம் ஆண்டு வருடாபிஷேக
விழாவுடன் ஆன்மிக விழா இன்று தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நாளை மறுநாள் நடைபெற
இருப்பதால் முதல் நாளான இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க ஆன்மீக விழா மற்றும் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கணபதி ஹோமமும் வருடாபிஷேகமும் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள்
குழுவினர் நடத்தி வைத்தனர். யாகசாலையை தொடர்ந்து மங்கல இசை வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கும்ப கலசம் தேவர் நினைவாலயம் வலம் சென்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு புனித கும்ப நீர் ஊற்றி அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தினர்.
நிகழ்ச்சியில் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் உள்ளிட்ட
தேவரின் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பால்குடம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம்,
பொங்கலிடுதல், முடிகாணிக்கை செலுத்துதல் போன்ற ஆன்மீகம் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.